×

சாரைசாரையாக நிர்வாகிகள் விலக திட்டமிட்டிருப்பதால் கலங்கிப் போயிருக்கும் மாஜி விஐபி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலைகட்சியில் ஏற்பட்ட கடும் அதிருப்தியால் தொடர்ந்து நிர்வாகிகள் அங்கிருந்து விலகுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறதே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா…இதனால் இலையின் தலைகள் அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்களாம். இதில் மாங்கனி மாவட்டத்தில் சென்ற முறை சிட்டிங் எம்எல்ஏக்களாக இருந்தவர்களும், கடந்த தேர்தலில் நின்று ஜெயித்த சிலரும், அடுத்தடுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க தயாராகிக்கிட்டு இருக்காங்களாம். இதனால் வாரம் தோறும் சொந்த ஊரில் முகாமிடும் மாஜி விஐபி, அவர்களது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவு போட்டிருக்கிறாராம். அதோடு எப்போது வந்தாலும் அவர்களை அழைத்து அன்பொழுக பேசி நலம் விசாரிக்கிறாராம்.  ஆனால் இந்த அன்பும், நலம் விசாரிப்பும் எத்தனை நாள், அவர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் என்பதும் கேள்விக்குறியாக இருக்காம். உச்சபதவியில் இருந்தபோது, எதிரே நின்னாலும் கண்டுக்காதவரு, இப்போ மட்டும் எதுக்கு கருணை காட்டுறாரு என்று சிலர் வெளிப்படையாகவே குமுறுகிறார்களாம். அதிகாரம் இழந்த அஞ்சாறு வாரத்திலேயே இவங்களை தக்கவைக்கிறது குதிரை கொம்பா இருக்கு. இன்னும் அஞ்சு வருஷத்துக்கு அண்ணன் எப்படி கட்டிக்காப்பாத்த போறாரு என்பது மாங்கனி இலை தொண்டர்களின் மைன்ட் வாய்சாக ஒலிக்குதாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘போலி பட்டாக்களில் அரசு நிலங்களை  விற்றவர்கள் பற்றி ஏதோ விவகாரம் இருப்பதாக சொன்னியே.. அது என்ன மேட்டர்..’’  என ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா. ‘‘பூட்டு மாவட்டத்தின்  மலைகளின் இளவரசி நகர் பகுதியில், நிலமதிப்பு மற்ற தரை பகுதிகளை விட அதிக  அளவில் உள்ளது. குறிப்பாக இந்நகரை ஒட்டிய ‘‘வில்’’, ‘‘அடு’’ எனத்துவங்கும்  பகுதிகள் உள்ளிட்ட இடங்களின் நில மதிப்பு மிக அதிகமிருக்கிறது. இதை  பயன்படுத்தி கடந்த 10 ஆண்டுகளாக பல நூறு ஏக்கர் அளவிற்கு அரசு தரிசு  நிலங்கள் போலி பட்டாக்கள் மூலம் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.  இதுபோல 300 போலி பட்டாக்களை கண்டறிந்து ‘‘அதிகாரியாக இருந்தவர்’’ ரத்து  செய்தார். அவருக்குப் பிறகு இந்த போலி பட்டா விவகாரத்தில் எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போலி பட்டாக்கள் தயாரிக்கப்பட்டு  விற்கப்பட்ட நிலங்களை, பல அரசு உயர் அலுவலர்களும், முன்னாள் இலைக்கட்சி  மாஜிக்களும் வாங்கிக் குவித்திருக்கின்றனர். இதற்கு உடந்தையாக  வருவாய்த்துறையினரும் இருந்திருக்கின்றனர். இவர்களில் சிலர் தற்போது வேறு  ஊர்களுக்கு மாற்றப்பட்ட நிலையில், மேலும் பல அலுவலர்கள் இன்னமும் தங்களது  செல்வாக்கில் பணி தொடர்கின்றனர். இவர்கள் உள்ளிட்ட போலி பட்டாக்கள்  தயாரித்து அரசு நிலங்களை விற்ற, விற்க உதவிய அரசு அலுவலர்கள் மீது  துறைரீதியான நடவடிக்கையும், அனைவர் மீதும் குற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ள  வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்கிறது…’’ என்றார்  விக்கியானந்தா. ‘‘வீரமான எக்ஸ் மினிஸ்ட்டர் சொத்துப் பட்டியைல கேட்டு இலை கட்சியின் ரத்தங்கள் ஆடிப்போயிருக்காமே…’’ ‘‘மிஸ்டர்  பத்தூர் மாவட்டத்துல இலைகட்சியோட வீரமான எக்ஸ் மினிஸ்டர் சொத்துகுவிப்பு  பத்தின மேட்டர தான் ரத்தங்கள் மத்தியில இப்போ பரபரப்பான பேச்சா இருக்காம்.  ஆரம்பத்துல, சாதாரண ஒன்றிய செயலாளரா இருந்து மாவட்ட செயலாளராக, ஜெ.  ஆக்கினாங்க. அப்புறம் 2013ல மினிஸ்டரானார். ஜெ. இருக்குற வரைக்கும் அமைதியா  இருந்தவரு, அதுக்கு அப்புறமா கடந்த 5 வருஷத்துல கோடிகள்ல அசையா சொத்து  வாங்கி குவிச்சிட்டாராம். சேலத்துக்காரரும், ஆட்சிக்கு ஏதாவது ஆபத்து  வந்துடுமோன்னு, மினிஸ்டருங்கள கண்டுக்கவே இல்லையாம். இதனால் இலை  மினிஸ்டருங்க சொத்துக்கள வாங்கி குவிச்சிருக்காங்க. அதோட இல்லாம  அதிகாரிங்களும் அவங்க பங்குக்கு, கஜானாவை காலி பண்ணிட்டாங்களாம். இதுல  குறிப்பாக வீரமான எக்ஸ்மினிஸ்டரோட, சொத்து பட்டியல் உள்ளூர் ரத்தங்களுக்கு  தெரிஞ்சிருக்கு. அவரின் சொத்து விவரத்தை காதுல கேட்டே  ஆடிப்போய்ட்டாங்களாம். இதுவரைக்கும் ஓசூர், பெங்களூரு, வேலூர், ஐதராபாத்,  விஜயவாடானுதான் வீரமானவரின் ஸ்டார் ஓட்டல்கள், கம்பெனிகள், மண்டபங்கள்னு  இருந்ததா நெனைச்சுக்கிட்டு இருந்தாங்களாம். இப்போ, ஆஸ்திரேலியா,  இந்தோனேசியா, ஆப்பிரிக்கானு சர்வதேச அளவுல சுரங்கமும், ஓட்டல்களும், விவசாய  பண்ணைகளும்னு பட்டியல் நீளுதாம். இது எல்லாமே அவரோட பினாமிகள் பேர்ல  வெச்சிகிட்டு, சொந்த ரத்த உறவுகளோட வாரிசுகள் மூலமாக கவனிச்சுகிட்டு  வர்றாராம்.கட்சியில இருக்குற நம்மல கண்டுக்கவே இல்ல, தனியா இவர்  மட்டும் இவ்ளோ வேலை செஞ்சிருக்காருன்னு, கட்சி ரத்தங்கள் கொதிச்சுபோய்  இருக்காங்களாம். இதனால சொத்து பட்டியலை சம்பந்தபட்ட பினாமிங்க வாயில  இருந்தே வாங்கி இருக்காங்க கட்சி ரத்தத்தின் ரத்தங்கள். அந்த தகவல்களை  அமலாக்கத்துறைக்கும், மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் அனுப்ப தயாராகி  வர்றாங்களாம்’’ என்று சொல்லி முடித்தார் விக்கியானந்தா. …

The post சாரைசாரையாக நிர்வாகிகள் விலக திட்டமிட்டிருப்பதால் கலங்கிப் போயிருக்கும் மாஜி விஐபி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Leaf Party ,Uncle ,Peter ,wiki ,Yananda ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...